கடல்கள்


மூதாதைகள் பயிற்றுவித்த
ரகஸ்யம் சொல்லி பசியாறிப் போகும்
கடற்பறவைகளும்
முதுகில் மேயும் கலங்களின் புள்ளிகளும் நிறைந்த
காட்சிகள் நிறம் மாறும்
கடல்கள்ஆதியில் நிச்சலனத்தில் புதைந்திருந்தது

மௌனத்தின் கொடூர சுயம் சகிக்கவியலாது
வேட்கை கொண்ட தேடலின் உந்துதலில்
துடுப்புகள் வலிக்க வலிக்க
கயிறுகள் அவிழ்ந்து
ஓங்காரத்துடன் துவங்கியது
கரைகள் மீதான தேடல்கள்
சலித்து விடாத மீறல்கள்

பிறகொரு நாளில்
ஆழிருட்டுக்குள் புதைந்து போய் விட்ட
பேரமைதியின் மையம் தொட
ஒன்று கூடி தீர்மானித்த கோப்பைகள்
இன்றிரவுக்குள் கடல் குடிக்க வந்தன

பின் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
கடலுக்குள் கோப்பைககளும்
கோப்பைகளுக்குள் கடலும்

Comments