காலம் தன் தெருக்களில் என்னை
சாட்டையாலடித்தபடி இழுத்து வருகிறது
கந்தலாடையுடன்...
படர்ந்த மணற்பரப்பில் குருதியிறைத்தபடி
கடந்த காலங்களின்
சிலுவையின் கணம் அழுத்த அழுத்தச் சரிகையில்
மண்குடுவையிலிருந்த தண்ணீரை
நாவுகளுக்கு வார்க்கிறாய்
காவற்காரனின் சவுக்கடிகளை ஏற்றுக் கொண்டவளாய்
நான் சிலுவையில் சார்த்தப்படுகிறேன்
பெருவிரல் நுனியிலிருந்து
மெள்ளத் தளர்ந்து
கண்களில் நிற்கிறது என் ஆத்மரசம்
நீ தண்ணீர் வார்க்கிறாய்
விடைபெறுதலுக்கான கையசைப்புகள்
அடக்கித் தோற்று பீறிடும் கண்ணீர்
மெல்லப் புதைகிறது இமைகள்
யுகாதி யுகங்களுக்கான பேரன்பை நிறைத்துக் கொண்டு

Comments
Post a Comment