புலிகள் குறித்து அத்துப்படியாகியிருக்கும்
உன் ஆன்மாவின்
கீறலையொத்த கிழிசலின் வழியே
கழிவிரக்கம் வேண்டி நுழைகிறது
பற்களைப் பிரயோகிக்கும்
சூத்திரம் மறந்ததாய்ச்
சொல்லும் என் புலி
தொலைந்து போய்விட்ட
வெளிர்நிறப் பூனைக்குப் பகரமாகவோ
இருள் படர்ந்த இரவுகளில்
அக்குள்களுக்கிடையே புகுந்து நிகழ்த்தும்
கதகதப்புக்காகவோ
தனிமையின் நெடுவழிகளில்
அதை துணை சேர்க்கிறாய்
வலியும் சுகமும் பிணைந்த நீளங்களில்
இடையிடையே இருட்டு
களைப்பின் கறை படிந்த சாயங்காலங்களில்
உலர்ந்து போன உன் சருமத்தை
அது தன் நாவால் வருடுகிறது
சுகிக்காதே!
அதற்குத் தெரியும்
நாவுகளால் மாம்சம்
தின்னும் மந்திரம்.

Comments
Post a Comment