பிரபஞ்சத்தின் ஆதிநாளில் தொடங்கிய
உயிர்ப்பை சுமந்து நடக்கும்
நதியின் கரையோரம்
அலுவலகச் சுமையைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள்
ஆதிராவும் வினோதனும்
நதியின் விசாலத்தில் பிரம்மித்து
பெருமூச்சோடு
பின்னால் கைகளை ஊன்றியவள்
உள்ளங்கைக் குறுகுறுப்பில் பார்க்க
வயிறு காட்டிய திசையில்
பயணித்திருந்த எறும்பொன்று
மூன்றாம் காலின் முனை மழுங்கி
துடித்துக் கிடந்தது
ஆதிரா வருந்தினாள்
'' பாவஞ்சாமி நசுக்கீறு'' என்றான் வினோதன்
''போண்ணா'' என்றபடி
நதியில் விரல் நனைத்து
எறும்பை நிறைத்தாள்
''இதத்தாஞ்சாமி நானுஞ் சொன்னேன்''
எறும்பு தத்தளித்தது
கால்களைப் புதிய கடலுக்குள்
பெரு வாழ்வின் கனவோடு வீசியது
தென்பட்ட தரையின் பிடிமானம் பற்றி
நகர்ந்து
வெளியேறி
ஆசுவாசித்தது
தன் உதடுகளை தாடைக்கும் வலிக்காமல்
குவித்து
மெல்ல ஊதினாள்
உயிர்ச் சுவாசம் புகன்டதாய்
பாறையிடுக்கில்
ஓடி மறைந்தது
கடவுளோடு சம்பாஷனை தொடரும்
உச்சி பொருந்தாத குழந்தையாய்
சிரித்துக் கொண்டிருந்தாள் ஆதிரா...
( அனுவுக்கு....)

Comments
Post a Comment