மதுவாசி


மாநகரங்களிலிருந்து விலகிச்  செல்லும்
எல்லாக் கடைசிப் பேருந்திலும்
அவனைப் பார்க்க முடியும்

அலுவலக இருக்கையைத் தேய்ப்பதிலும்
பதின் பருவத்துப் பிள்ளைகளுக்கு
காவல் செய்வதிலும்
வாழ்வின் தூரங்களைக் கழிப்பவர்கள்
முகம் சுழித்து மௌனித்திருப்பார்கள்

உடைதலே நிகழாமல்
இறுகிய கணவன்களை
பார்த்தபடியேயிருப்பார்கள்
அவர்களின் முன்பொரு காலத்து
புலிக்கதைகளுக்கு
பழகிப்போன நடுவயதுப் பெண்கள்

தீர்ந்தே விடாத வேலைகளின்
கொடுக்குகளிலிருந்து
தற்காலம் தப்பித்தவர்கள்
எரிச்சலோடு நடத்துனரிடம் முறையிடுவார்கள்.

அவனுக்கு எதுவும் தெரியாது

கைவிடப்பட்டவன் அவன்

உழைப்பை உறிஞ்சிய பிள்ளைகளையோ
கொஞ்சநாட்களாய் தங்கி விட்ட பசியையோ
நிகழாதே போய்விட்ட பேரன்பையோ
கண்டுகொள்ளப்படாத வீரதீரத்தையோ
மதுவாசத்தோடு நிகழ்த்திக் கொண்டிருப்பான்

சகித்தலின் தொடக்கத்திலிருந்து
என்ஜினின் கர்ஜனையோடு
தொடர்ந்தபடியே இருக்கிறது
பிரயாணத்தின்
கால்களை நிரப்பும் ஆணிகள்.

Comments